கலவை : ராணிப்பேட்டை மாவட்டம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 3,333 வீடுகளுக்கு ரூ.116.63 கோடி மதிப்பீட்டில் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டி தரும் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1975-ம் ஆண்டு குடிசை வீடு இல்லாத தமிழகமாக மாற்ற வேண்டும் என புதியதாக திட்டத்தை அறிவித்தார்.
இதையடுத்து, ஊரகப் பகுதிகளில் குடிசை வீடுகளை மாற்றி நிரந்தரமாக கான்கிரீட் வீடுகளை அனைவருக்கும் அமைத்து தருவதற்காக கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் கிராமப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
கலைஞரின் கனவு திட்டத்தில் தமிழ்நாட்டில் குடிசை வீடுகள் இல்லை என இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற வேண்டும், என வருகின்ற 2030-ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2024-25-ம் ஆண்டில் 1 லட்சம் வீடுகள் ஒரு வீட்டிற்கு 360 சதுர அடியில் தலா ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 3,333 வீடுகளுக்கு என்று மொத்தம் ரூ.116.63 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சியில் 625 வீடுகளும், ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சியில் 452 வீடுகளும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 29, ஊராட்சியில் உள்ள 179 வீடுகளும், நெமிலி ஒன்றியத்தில் உள்ள 47, ஊராட்சியில் 502 வீடுகளும், சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சியில் உள்ள 339 வீடுகளும், திமிரி ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சியில் 560 வீடுகளும், வாலாஜாபேட்டை ஒன்றியத்தில் 36 ஊராட்சியில் 676 வீடுகளும், கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமிரி ஒன்றியத்தில் உள்ள அகரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்ற பயனாளிகள் தேர்வு செய்து வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தன இப்பணிகளை, கலெக்டர் சந்திரகலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், திட்ட இயக்குனர் ஜெயசுதா, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அன்பரசன், தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் பரமேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர் மணி, லதா வெங்கடேசன், ரேவதி ரமேஷ், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தகுதியான பயனாளிகள் தேர்வு எப்படி?
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளின் தகுதிகள் பயனாளி நிலையான கூரை கொண்ட வீட்டில் வசிப்பதாக இருக்க வேண்டும். சொந்தமாக பட்டா இடம் வைத்திருக்க வேண்டும். கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் மறு கணக்கெடுப்பு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பில் இடம்பெற்றவராக மற்றும் வீடு அற்ற பயனாளி என கிராம சபையில் அனுமதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
பயனாளிகள் தாங்களாவே ஆறு மாத காலத்திற்குள் வீடு கட்டி முடிக்க வேண்டும். வீடு கட்டும் பணிக்கு 4 தவணைகளாக பில் தொகை வழங்கப்படும். பயனர்களுக்கு வீடு கட்ட கட்டுமான பொருட்கள் தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பயனாளிகளுக்கு ஊராட்சி துறை மூலம் ஒரு வீட்டிற்கு 50 கிலோ எடையுள்ள சிமெண்ட் 140 மூட்டைகள் வீதம் வீடு கட்ட வழங்கப்படுகிறது. பயனாளிகளுக்கு இரும்பு கம்பிகள் 320 கிலோ வீதம் வீடு கட்ட வழங்கப்படுகிறது.
The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ₹116.63 கோடியில் 3,333 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றம் appeared first on Dinakaran.