திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் நகர பகுதிகளில் அமைந்துள்ள 2 ஒன்றியங்களை தவிர்த்து மற்ற 12 ஒன்றியங்களிலும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் நவம்பர் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த, சர்வே பணியில் 192 ஊழியர்கள் உட்பட 2 வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 597 மாணவர்கள் என மொத்தம் 795 பேர் வேளாண்மை துறை அலுவலர்களுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம், தெக்களூர் ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகன் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 18 லட்சத்து 73 ஆயிரத்து 825 உட்பிரிவுகளில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் துல்லியமாக நடைபெற்று வருகிறது. 3 போகம் பயிர் சாகுபடி நடைபெற்று வரும் நிலங்களாக 1 லட்சம் ஏர்ஸ் பரப்பளவில் நெல் பயிர், 9 ஆயிரம் ஏர்ஸ் பயிர் வகைகள், 6 ஆயிரம் ஏர்ஸ் எண்ணெய் வித்துப் பயிர் வகைகள், கரும்பு பயிர் 4 ஆயிரம் ஏர்ஸ், பழங்கள், காய்கறிகள் பொருத்தவரை 25 ஆயிரம் ஏர்ஸ் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
இதுவரை, கடம்பத்தூர், எல்லாபுரம், ஈக்காடு ஆகிய ஒன்றியங்களில் 100 சதவீதம் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மற்ற ஒன்றியங்களில் 22ம் தேதிக்குள் முடிக்கப்படும் என கூறினார். டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் திருத்தணி வேளாண்மை உதவி இயக்குநர் பிரேம், உதவி வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை விதை அலுவலர் உட்பட வேளாண்மை துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.
* வேளாண் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது
திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் நிலம், பயிர் உட்பட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இப்பணிகளில் அதிக அளவில் வேளாண்மை கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி டிஜிட்டல் பயிர் சர்வே செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு திருத்தணி ஒன்றிய தலைவர் லிங்கமூர்த்தி தலைமையில் விவசாயிகள் திருத்தணியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்க நேற்று வந்திருந்தனர்.
அந்த மனுவில், அனுபவம் மற்றும் பயிற்சி இல்லாத வேளாண்மை கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் பயிர் சர்வே செய்தால், பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நெருங்கி வருவதால் கல்லூரி மாணவர்களை கொண்டு டிஜிட்டல் பயிர் சர்வே செய்வதை கைவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
The post திருவள்ளூர் மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தீவிரம்: வேளாண் இணை இயக்குநர் கள ஆய்வு appeared first on Dinakaran.