திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், வரும் 31ம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெற உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ல் திருப்புகழ் திருப்படித் திருவிழா மற்றும் ஜனவரி 1ல் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதேபோல் திருத்தணி மலைக் கோயிலுக்குச் செல்ல ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு திருப்படித் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, மலைக்கோயிலுக்குச் செல்லும் சரவணப் பொய்கை திருக்குளம் அருகில் முதல் படிக்கு திருக்கோயில் சார்பில் பூஜைகள் செய்து திருப்படித் திருவிழா தொடங்கி வைக்கப்படும். விழாவில், ஏராளமான பஜனை குழுக்கள் கலந்துகொண்டு திருப்புகழ் பாடியும், படிபூஜை செய்தும் மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

அன்று காலை 11 மணிக்கு மலைக்கோயில் மாட வீதியில் உற்சவர் வள்ளி தேர் திருவீதி உலா, இரவு 8 மணிக்கு தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: