தேனி: பெரியகுளம் அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த 3ம் தேதி முதல் கனமழை பெய்து வந்தது. தற்போது அந்த மழை குறைந்து வெயில் அடித்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற வந்ததால் வெளி நோயாளிகள் பிரிவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மருத்துவர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். போதிய மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர் மழை, வெயில் பாதிப்பு மற்றும் கலங்கிய குடிநீர் விநியோகத்தால் வைரஸ் காய்ச்சல் வழக்கத்தை விட 70% அதிகரித்துள்ளது. உள்நோயாளிகள் பிரிவில் குழந்தைகள் பெண்கள் உட்பட 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி இருக்கிறோம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு: நிரம்பி வழியும் பெரியகுளம் அரசு மருத்துவமனை appeared first on Dinakaran.