வைகுண்டம், நவ.11:ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று வைகுண்டத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோதே வைகுண்டத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட்டு செயல்பாட்டு வந்தது. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், வரையிலான பகுதிகளை தாண்டியும் வைகுண்டம் நீதிமன்றத்தின் எல்லை இருந்துள்ளது. வைகுண்டத்தில் இருந்து பிரிந்து திருச்செந்தூர், சாத்தான்குளம், தூத்துக்குடியில் புதிய நீதிமன்ற வளாகங்கள் கட்டப்பட்டன. ஆனால் வைகுண்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் தான் நீதிமன்றம் இயங்குகிறது.
சுமார் 170 ஆண்டுகளை கடந்த நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட் பணியாளர்கள், வழக்கு விசாரணைக்காக வந்து செல்லும் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் நவீன வசதிகளுடன் புதிய நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என்று வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2019 டிசம்பரில் அதிமுக ஆட்சியில் வைகுண்டத்தில் புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு பணிகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில், வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கையை ஏற்று வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் சட்டமன்றத்தில், புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தார்.
இதைத் தொடர்ந்து, புதிதாக நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக துவங்கப்பட்ட இரு நீதிமன்றங்களை ஒரே இடத்தில் அமையும் வகையில் புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதன்படி நீதிமன்ற வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை அமைத்து, பழைய நீதிமன்றத்தை இடித்து அகற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வராததால் இதுவரை பழைய கட்டிடத்தில் தான் நெருக்கடிக்கு இடையே நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் தாமிரபரணியில் வந்த பெருமழை வெள்ளம் நீதிமன்ற வளாகத்திற்கு புகுந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.
இதனால் நீதிமன்ற வளாக முழுவதும் பழுதாகி பலமிழந்தது. மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, வைகுண்டத்தில் புதிதாக நீதிமன்றங்கள் விரைவில் கட்டி முடித்திட அரசை மீண்டும் வலியுறுத்துவேன் என உறுதி அளித்தார். இந்நிலையில், வைகுண்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்ட அரசு சுமார் ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் தமிழக அரசுக்கும், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
The post ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று ஸ்ரீவைகுண்டத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம் கட்ட ரூ.19 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.