இதனிடையே தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 10,000 ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருதில்லை என்றும், அவர்கள் குறைந்த ஊதியத்தில் வேறு நபர்களை அமர்த்தி பாடங்களை எடுக்கச் சொல்லியிருப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுபற்றி விசாரித்தபோது, தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பாலாஜி பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் பாலாஜி, 17வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த தகவலை துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காத தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசு பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி, தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான சுற்றறிக்கையை தொடக்க கல்வி இயக்குநர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
The post பள்ளிக்கு வராமல் வேறுநபர்களை அமர்த்தி முறைகேடு; ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.