தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியமானது உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக நிறுவப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து பயனாளிகளுக்கு வழங்குப்படும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசால் 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மேலும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிக்கு வழங்கப்படும் அரசின் ஆண்டு மானியமும் 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நலநிதியத்திலிருந்து உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.11.2024) தலைமைச் செயலகத்தில், அவ்வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கினார்.
இந்த நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், சட்டத்துறை செயலாளர் எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் வி. கார்த்திகேயன், மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை, இணைத் தலைவர்கள் ஆர். அருணாசலம், ஜி. மோகனகிருஷ்ணன், எம். மாரப்பன், பி. அசோக், சி. ஸ்ரீமுருகா, டி. சரவணன், கௌரவ செயலாளர் ஆர். அய்யாவு, செயற்குழு தலைவர் ஜெ. பிரிஸ்சில்லா பாண்டியன், உறுப்பினர்கள் எம். வரதன், கே. சந்திரமோகன், ஆர்.சி. பால்கனகராஜ், எம். வேல்முருகன், கே. கதிரவன், கே.ஆர்.ஆர். அய்யப்பமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.