திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி நடத்தையில் சந்தேகம் கத்திரிக்கோலால் குத்தி டெய்லர் தற்கொலை

சென்னை: திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் டெய்லர் ஒருவர் தன்னைத் தானே கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(41). டெய்லரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். சத்யா வடபழனியில் உள்ள புத்தகங்கள் பைடிங் செய்யும் கடையில் பணியாற்றி வருகிறார். திருமணம் நடந்த நாள் முதல் சத்யா அடிக்கடி போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது கணவர் மூர்த்திக்கு பிடிக்கவில்லை. மேலும், சத்யாவின் நடத்தையில் மூர்த்திக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வரும் போது குடித்துவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்றும் மூர்த்தி குடித்துவிட்டு தனது மனைவியிடம் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மூர்த்தி போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து தன்னைத் தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். சிறிது நேரத்தில் ரத்த போக்கு அதிகமாகி அவர் மயங்கினார். மனைவி சத்யா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர்.

அதன்படி விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூர்த்தியை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு திரும்பி சென்றனர். தகவல் அறிந்த வடபழனி போலீசார், மூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து உயிரிழந்த மூர்த்தியின் மனைவி சத்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் மூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளார்.

The post திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி நடத்தையில் சந்தேகம் கத்திரிக்கோலால் குத்தி டெய்லர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: