சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உயர் நீதின்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், அவரது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், எதிர்மனுதாரர் தனபாலுக்கு பலமுறை வாய்ப்பு அளித்தும், அவர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. பொது வாழ்க்கையில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறான கருத்துகளை தனபால் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். இந்த கருத்து எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளது.
இப்போதுள்ள சமூக ஊடக காலத்தில், பொதுவாழ்வில் உள்ளவர்களை கேவலப்படுத்துவது என்பது சிறுபிள்ளைத்தனமானதாக உள்ளது. யார் வேண்டுமானாலும், சமூக ஊடக கணக்கை தொடங்கி, அதில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் பதிவுகளை போடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு ஆளை குறிவைத்து அவதூறு பதிவுகளை போட்டு, அவர் மீது சேற்றை வீசுகின்றனர். இந்த போக்கு தற்போது ஒரு வழக்கமாகி விட்டது. இதுபோன்ற செயல் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மனிதன் நடந்து செல்லும்போது அவனுக்கு முன்பாக அவனது மரியாதை சென்றுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அவன் தலைநிமிர்ந்து செல்கிறான். மணி ஓசை வெளியான பின்னர் அந்த ஓசையை திரும்ப பெற முடியாது.
எனவே, ஒரு மனிதனின் நற்பெயருக்கு அவதூறு மற்றும் களங்கம் செய்து விட்டால், அதை திரும்ப பெற முடியாது. அதற்கு ஈடாக இழப்பீடுதான் வழங்க முடியும். எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக தனபால் வழங்கவேண்டும். தனபாலின் அவதூறு பேட்டி வீடியோவை இணையதளத்தில் இருந்து நீக்க சம்பந்தப்பட்ட அமைப்புக்கு எடப்பாடி பழனிசாமி கோரினால் அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட அமைப்பு நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post கொடநாடு வழக்கில் பழனிசாமி தொடர்புபடுத்தி பேச நிரந்தர தடை ரூ1.10 கோடி நஷ்டஈடு தனபால் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.