ஒடுகத்தூர் : வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள்(100), கணவனை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். சற்று பார்வை குறைபாடு உள்ளவர்.இந்நிலையில், நேற்று ராஜம்மாள் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் சத்தம் போடாமல் நைசாக மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர், வீட்டில் ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்து உள்ளார். அப்போது, வீட்டு அலமாரியில் ஒரு சிறிய பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு சவரன் கம்மல் இருந்துள்ளது. அதனை, திருடிச் கொண்டு செல்லும் போது சத்தம் கேட்டு மூதாட்டி எழுந்து ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால், சந்தேகமடைந்த மூதாட்டி நகையை தேடிபார்த்த போது அது திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து, உடனே மூதாட்டி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரஜினி(47) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வருவது வழக்கம். அவர் மீது சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால், அதே பகுதியில் மறைந்திருந்த ரஜினியை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நகையை திருடியது ஒப்புக்கொண்டார்.பின்னர், ரஜினியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
The post 100 வயது மூதாட்டியிடம் 1 சவரன் நகை திருடி சென்றவர் கைது appeared first on Dinakaran.