சென்னை அண்ணாசாலையில் நேற்று பைக்கில் சென்ற ஒருவர், பின்னால் வந்த மாநகர பேருந்துக்கு வழிவிடாமல் இடையூறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பேருந்து ஓட்டுனர் ஸ்பென்சர் சிக்னல் அருகே பைக் ஆசாமியை வழிமறித்து கண்டித்துள்ளார். இதனால் பேருந்து ஓட்டுனருக்கும், பைக் ஆசாமிக்கும் இடையே சாலையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில், பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஆனந்தராஜ் (36) அங்கு வந்து, பைக் ஆசாமியிடம், பேருந்து செல்ல வழியை விடுங்கள். உங்கள் பிரச்னையை பேசிக்கலாம், என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பைக் ஆசாமி, போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்தினர். இதை சற்றும் எதிர்பார்க்காத காவலர், உடனே சக போக்குவரத்து போலீசார் உதவியுடன் பைக் ஆசாமியை பிடிக்க முயன்றார்.
அப்போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க, சாலையிலேயே பொதுமக்கள் முன்னிலையில் தனது உடைகளை அவிழ்த்து வீசிவிட்டு, ‘ஓம் நமச்சிவாயா….. நான் ஒரு வாட்ச் கம்பெனி ஓனரு…. எனது கம்பெனி எழும்பூரில் இருக்கிறது’ என்று கோஷம் எழுப்பியபடி இருந்தார். அந்த நபரை கை மற்றும் கால்களை பிடித்து தூக்கி வந்து சாலையோரம் கொண்டு வந்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் அண்ணாசாலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், பைக் ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அப்போது அந்த நபர், போலீசாரின் காலில் விழுந்து என்னை விடுவிடுங்கள் என்று கூறினர். ஒரு கட்டத்தில் அந்த ஆசாமியை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், எழும்பூர் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் (48) என்றும், இவர் தனியார் நிறுவன ஊழியர் என்றும் தெரியவந்தது. சண்முகராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அவர் சிசிச்சையில் இருந்து வருவதாகவும், சில நாட்கள் அவர் சரியாக மருந்து எடுத்துக்கொள்ளாதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
The post அண்ணாசாலையில் பேருந்துக்கு வழிவிடாமல் தகராறு போக்குவரத்து காவலரை தாக்கிய பைக் ஆசாமி: உடைகளை அவிழ்த்து ரகளை appeared first on Dinakaran.