திருவண்ணாமலை, நவ.5: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது, பக்தர்களுக்கான வசதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, டிசம்பர் 13ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். எனவே, தீபத்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவிழாவில் சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்து புதுப்பொலிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பஞ்ச ரதங்களும் தற்போது முழுமையாக சீரமைக்கப்படுகிறது.
மகாரதம் வரும் 8ம் தேதி வெள்ளோட்டம் விட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அண்ணாமலையார் கோயில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்த கூட்டத்தில், டிஆர்ஓ ராமபிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தற்காலிக பஸ் நிலையங்களை அமைத்தல், சிறப்பு பஸ்கள் இயக்கம், கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தனிகவனம் செலுத்தப்படும். தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்தல், குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதி போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மகா தீபத்தன்று மலையேற 2,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதேபோல், பரணி தீபத்திற்கு 7,500 பக்தர்களுக்கும் மகா தீப தரிசனத்திற்கு 11,500 பக்தர்களுக்கும் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்.
மேலும், வழக்கம்போல இந்த ஆண்டும் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு தரிசனத்துக்கான அனுமதி வழங்கப்படும். பரணி தீபத்திற்கு ஆன்லைன் மூலம் 500 டிக்கெட்டுகளும், மகா தீபத்திற்கு 1,100 டிக்கெட்களும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் இந்த ஆண்டு விரிவாக மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது முதல் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அதிகரிப்பு: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.