வந்தவாசி, நவ.27: வந்தவாசி நகராட்சியில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதலால், அரசு வாகனத்தை அடித்து ஊழியர் அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதனால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் நேற்று மன்னிப்பு கேட்டதால், அபராதம் விதித்து கடை திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி ஆணையாளர் சோனியா தலைமையில் மேலாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் ஊழியர்களுடன் நேற்று காந்தி சாலை, பாக்குக்கார தெரு, அச்சரப்பாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் தனித்தனியாக திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாக்குக்கார தெருவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் என்பவருக்கு சொந்தமான எஸ்.எம்.எஸ் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டீ கப்புகள் அதிக அளவில் இருந்தன. இதனை பறிமுதல் செய்து கேரி பேக், கண்ணாடி பிளாஸ்டிக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது கடை ஊழியர் ஜித்து (33) என்பவர் டீ கப் விற்பனை செய்ய அனுமதி உள்ளது என கூறி ஆணையாளரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது ஆணையாளர், மேலாளர் இருவரும் அரசு அனுமதி அளித்துள்ள அளவைவிட அதிக அளவில் பிளாஸ்டிக் தன்மை உள்ளதால் இதனை பறிமுதல் செய்வதாக கூறினர். தொடர்ந்து சுமார் ₹10 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் டீ கப்புகளை பறிமுதல் செய்து நகராட்சி வாகனத்தில் எடுத்து செல்ல முயன்றனர்.
அப்போது திடீரென ஆவேசம் அடைந்த கடை ஊழியர் ஜித்து, நகராட்சி வாகனத்தின் ஏறி டீ கப்புகளை அவரது கடை பக்கமாக வீசிவிட்டு, வாகனத்தையும் வேகமாக அடித்து அட்டகாசம் செய்தார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி ஊழியர் ஒருவர் ஏன் வாகனத்தை அடிக்கிறாய். அவர் யார் ஐடிகார்டு வாங்குகள் என்று கூறவே, உடனே அந்த கடை ஊழியர், எதிரே உள்ள மற்றொரு கடைக்குள் புகுந்துவிட்டார். இதையடுத்து ஆணையாளர் தடை செய்த பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கடையின் உரிமையாளரும், கடை ஊழியரும் நகராட்சி ஆணையாளரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன்பேரில், பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்ததற்கு ₹40ஆயிரம் அபராதம் விதித்து, கடை திறக்கப்பட்டது.
The post அரசு வாகனத்தை அடித்து ஊழியர் அட்டகாசம், கடைக்கு சீல் வைப்பு மன்னிப்பு கேட்டதால், அபராதம் விதித்து கடை திறப்பு வந்தவாசி நகராட்சியில் தடை செய்த பிளாஸ்டிக் ெபாருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.