மின் இணைப்பு விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட 25 மின்சார சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு: அதிகாரிகள் தகவல்

சென்னை: மின் இணைப்பு பெயர் மாற்றம் விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக மின் வாரியம், மின்சாரம் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப இரு மாதங்களுக்கு ஒரு முறையும் கட்டணம் வசூலிக்கிறது. புதிய மின் இணைப்பு வழங்கும் போது விண்ணப்ப கட்டணம், வளர்ச்சி கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய, ஒருமுறை செலுத்தக்கூடிய பல்வகை கட்டணம் வசூலிக்கிறது.

இதில் புதிதாக மின் இணைப்பு வழங்கும் போது அந்த மின் இணைப்புக்கு தேவையான தளவாடங்கள் அனைத்தையும் மின் வாரியம் வழங்கி மின் இணைப்பு கொடுக்கப்படும். அதன் பின்னர் நுகர்வோர் மின் சாதனம் இடமாற்றம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த மின்சார சேவைகளுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும் வசூலிக்கப்பட்டது. தமிழக மின் வாரியமும், பல சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வசூலித்து வந்தது.

தற்போது, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரையை ஏற்று, விண்ணப்ப கட்டணம், மின் சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட, 25 சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு, கடந்த மாதம் 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மின் இணைப்பு விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட 25 மின்சார சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: