கேரளாவில் ரயில் விபத்தில் உயிரிழந்த 4 தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கேரள ரயில் விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள மாநிலம் பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் கடந்த 2ம் தேதி பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (55), வள்ளி (45), காரைக்காடு டி.பெருமாள் பாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (45) மற்றும் அல்லிக்குட்டையை சேர்ந்த ராஜம்மாள் (43) ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கேரளாவில் ரயில் விபத்தில் உயிரிழந்த 4 தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: