சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல்: விடிய விடிய தீவிர சோதனை, மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் உள்ள, இணையதளத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக விமானங்கள் நிறுத்தி வைக்கும் பகுதி, ஓடுபாதை, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், பயணிகள் புறப்பாடு, சரக்கு பார்சல்கள் விமானங்களில் ஏற்றும் பகுதி ஆகிய இடங்களில் தீவிர சோதனைகள் நடந்தன.

நள்ளிரவில் தொடங்கிய சோதனை, நேற்று காலை வரை தொடர்ந்து நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இதையடுத்து இது வழக்கம்போல் சமூக விரோதிகள் கிளப்பிவிட்ட புரளி என்று தெரிய வந்தது. இதனால், அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.  இந்த சம்பவம் குறித்து, சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதோடு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சமூக விரோத கும்பலை, கூண்டோடு பிடிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல்: விடிய விடிய தீவிர சோதனை, மர்ம நபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: