அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் குப்பை லாரியில் பயணித்து ஓட்டு கேட்ட டிரம்ப்: ஜோ பைடன் கருத்தை ‘ஸ்டண்ட்’ ஆக மாற்றி பிரசாரம்

நியூயார்க்: வரும் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், குப்பை லாரியில் பயணித்து டிரம்ப் வாக்கு சேகரித்ததால் தேர்தல் பிரசாரம் பரபரப்பை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்புக்கும், துணை அதிபரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி கடுமையாகி வருகிறது.

இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கருத்துக் கணிப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு இந்துக்கள் மீது அக்கறையில்லை; வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டிக்கிறேன். இஸ்ரேல் தொடங்கி உக்ரைன் வரை பல்வேறு முக்கிய விவகாரங்களில் ஜோ பைடனும், கமலா ஹாரிசும் பேரிடராக அமைந்துவிட்டனர்.

வரலாற்றில் மிகச்சிறந்த பொருளாதாரமாக அமெரிக்கா கட்டமைக்கப்படும். மீண்டும் அமெரிக்காவை சிறப்பான தேசமாக்குவோம்.  தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டரம்ப், தனது பெயரை தாங்கிய போயிங் 757 ரக விமானத்தில் இருந்து தரையிறங்கினார். உடனடியாக வெள்ளை நிறத்தில் அவரது பெயருடன் தயாராக இருந்த குப்பை வண்டியில் பயணித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இது எப்படி உள்ளது; எனது குப்பை லாரி? கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு நான் கொடுக்கும் மரியாதை இது’ என தெரிவித்தார். முன்னதாக டிரம்பின் ஆதரவாளர்களை ‘குப்பைகள்’ என அதிபர் ஜோ பைடன் விமர்சித்த நிலையில் இந்த அதிரடி எதிர்ப்பை டிரம்ப் வெளிக்காட்டியுள்ளார். இதன் மூலம் ஜோ பைடன் தெரிவித்த கருத்தை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தில் தனக்கு சாதகமாக டிரம்ப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் குப்பை லாரியில் பயணித்து ஓட்டு கேட்ட டிரம்ப்: ஜோ பைடன் கருத்தை ‘ஸ்டண்ட்’ ஆக மாற்றி பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: