பழநி கந்தசஷ்டி விழா நவ. 2ல் துவங்குகிறது : 7ம் தேதி சூரசம்ஹாரம்

பழநி : பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை மறுநாள் காப்புக் கட்டுதலுடன் துவங்க உள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி. இவ்விழா நாளை மறுதினம் (நவ. 2, சனி) மலைக்கோயிலில் காப்புக்கட்டுதலுடன் துவங்க உள்ளது.

அன்றைய தினம் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை செய்யப்பட்டு, காப்பு கட்டப்படும். தொடர்ந்து சாயரட்சை, தங்கரத புறப்பாடு போன்றவை நடைபெறும். விழா நடைபெறும் 7 நாட்களும் வள்ளி – தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமி தங்கச்சப்பரம், வெள்ளி காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன் மற்றும் சூரபத்மன் ஆகிய சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

8ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மலைக்கோயிலில் சண்முகர் வள்ளி – தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி – தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post பழநி கந்தசஷ்டி விழா நவ. 2ல் துவங்குகிறது : 7ம் தேதி சூரசம்ஹாரம் appeared first on Dinakaran.

Related Stories: