சமன்செய்து சீர்தூக்கி என்ற திருக்குறளின் அடிப்படையில் நீதித்துறை செயல்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

மதுரை: சமன்செய்து சீர்தூக்கி என்ற திருக்குறளின் அடிப்படையில் நீதித்துறை செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று முதன்முறையாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்தார். முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பழமையான மதுரையை ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் என்று கூறுவார்கள்.

ஆனால், எனது கருத்துப்படி உயர்ந்த கலாசாரம், பண்பாடு நிறைந்த மதுரையை போன்று ஏதென்ஸ் பழமையானது என்று தான் கூற வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். மதுரை தூங்கா நகரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மணம் வீசும் மல்லி, ஜல்லிக்கட்டு என பாரம்பரியமான கலாசாரத்தைக் கொண்டுள்ளது. மதுரை மக்களின் அன்பும், பாசமும் என்னை கவர்ந்து உள்ளது. சமன் செய்து சீர்தூக்கி என்ற திருக்குறளின் அடிப்படையில் நீதித்துறையும், நீதி பரிபாலனமும் செயல்பட வேண்டும்.

மும்பை, சென்னை ஐகோர்ட்டுகள் மிகவும் பழமையான நீதிமன்றங்களாகும். அவை, நாட்டிற்கும் அந்தந்த மாநிலங்களுக்கும் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளன. சென்னை ஐகோர்ட்டில் இருந்து பல நீதிபதிகள், மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர். நாம் ஒவ்வொருவரும் இணைந்து நீதித்துறையின் மேன்மைக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு கூறினார். வரவேற்பு நிகழ்வில், ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி ஆர்.சுப்ரமணியன் மற்றும் நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post சமன்செய்து சீர்தூக்கி என்ற திருக்குறளின் அடிப்படையில் நீதித்துறை செயல்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: