சுசீந்திரம் அருகே பழையாற்றில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி: ஊருக்குள் வெள்ளம் வருவதை தடுக்க நடவடிக்கை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் முக்கிய ஆற்றில் ஒன்று பழையாறு. இந்த ஆறு சுருளோட்டில் இருந்து தொடங்கி மணக்குடி வரை 35 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ளது. இந்த ஆற்றின் மூலம் பல்வேறு வயல்பரப்புகள் பாசனவசதி பெற்று வருகிறது. பல்வேறு ஊராட்சி, பேரூராட்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆற்றின் நடுவே உறைகிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இருந்த பழையாறு தற்போது சுருங்கியுள்ளது. மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பழையாற்றில் இருந்து தண்ணீர் ஊருக்குள் புகும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து ஏற்படாமல் இருக்கும் வகையில் பழையாற்று ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் மற்றும் பல அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். கடந்த 2021ம் ஆண்டு பழையாற்றின் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி வருவாய் அதிகாரிகள் உதவியுடன் நடந்தது. அளவீடு பணி முடிந்து ஆற்றின் இருபுறமும் 1045 எல்லை கல் போடப்பட்டது. மேலும் டிபரன்சியல் குளோபல் போசிசனிங் சிஸ்டம்(டிஜிபிசி) அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

இந்த அளவீடு செய்வதால், செயற்கைகோள் மூலம் எல்லைகள் ஒருங்கிணைக்கப்படும் என்றனர். ஆனால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பழையாறு கடந்த காலத்தை விட மூன்றில் ஒரு பகுதியாக சுருங்கிவிட்டது. இதற்கு காரணம் பல்வேறு இடங்களில் ஆற்றில் குறைவாக தண்ணீர் வரும்போது உள்ளாட்சி அமைப்புகள் படித்துறை உள்பட பல்வேறு பணிகள் செய்வதால், ஆற்றின் அகலம் குறைவதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஊருக்குள் தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. கல்லறைகள், சுடுகாடுகள் அதிக அளவு ஆற்றை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. பழையாற்றில் உள்ள ஆக்கிரமிப்பால் வெளளப்பெருக்கு ஏற்படும் போது அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, தாழக்குடி, திருப்பதிசாரம், நாஞ்சில் நகர், கோதைகிராமம், ஊட்டுவாழ் மடம், ஒழுகினசேரி, சுசீந்திரம் ஆகிய பகுதிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. 2006க்கு பிறகு வருடம் தோறும் மழையின் அளவு அதிகரித்து வருகிறது.

இதனால் பழையாற்றின் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என நீர் நிலை பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்திய வண்ணம் உள்ளன. பழையாற்றை புனரமைப்பு செய்யும் வகையில் ரூ.200 கோடியில் புதிய திட்டத்துக்கு ஆய்வு நடந்தது. ஆனால் ஆய்வு அறிக்கையுடன் இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மழையின் போது பழையாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பல்வேறு கிராமங்களை பாதித்து வருகிறது. அந்த வகையில் சுசீந்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக புறவழிச்சாலை வந்த பின், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து வருகிறது. பழையாற்றின் நீர் வழிப்பாதைகள் அடைக்கப்பட்டு உள்ளதுடன், பழையாற்றில் ஆகாய தாமரைகள் மண்டி கிடப்பதால், மடைகளில் ஏற்படும் அடைப்புகளும் தண்ணீர் செல்ல இடையூறாக உள்ளது.

இதையடுத்து முதற்கட்டமாக ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த மழையால் பழையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆனால் ஆகாய தாமரைகள் மண்டி கிடந்ததால், தண்ணீர் செல்ல வழியில்லை. இந்த நிலையில் முதற்கட்டமாக சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற பொதுப்பணித்துறை முடிவு செய்தது. இதற்காக படகு மூலம் பணியாளர்கள் சென்று, ஆகாய தாமரைகளை அகற்றி பின், ஜேசிபி மூலம் அவை அள்ளப்பட்டன. தற்போது தண்ணீர் சீராக செல்கிறது. ஆனால் மற்ற இடங்களில் ஆகாய தாமரைகள் மண்டி கிடக்கின்றன. இனி தண்ணீர் வரும் போது மீண்டும் அந்த பகுதிகளில் இருந்து ஆகாய தாமரைகள் அடித்து வர வாய்ப்பு உள்ளது. எனவே முறையாக ஆகாய தாமரைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சுசீந்திரம் அருகே பழையாற்றில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி: ஊருக்குள் வெள்ளம் வருவதை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: