புதுகை மாவட்டம் இலுப்பூர் வருவாய்த்துறைக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

*பள்ளி வளாகம், குளக்கரையில் பணிகள் மும்முரம்

*வனச்சூழலை பாதுகாத்திடும் திட்டத்தில் 50 சதவீதம் நிறைவு

விராலிமலை : இலுப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள குளக்கரை, பள்ளி வளாகம், பொது இடங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆலோசனையின் பேரில் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் 5 ஆயிரம் கன்றுகள் நடவு செய்து 50 சதவீத பணிகளை முடித்து இலுப்பூர் வருவாய்த்துறை முடித்துள்ளது.

பசுமை போர்வினை 33 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் 61.1 லட்சம் மரக்கன்றுகளை பொது இடங்கள், குளக்கரைகளில் நடவு செய்திட தமிழ்நாடு அரசு சார்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறைக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வனங்களின் சுற்றுச்சூழல் சமூகத்திற்கு தூய காற்று, நீர் வளங்கள், வளமான உயிர்ப்பன்மை, வாழ்வதற்கேற்ற சூழல் போன்றவற்றை வழங்குகின்றன. மேலும், கரியமில வாயுவை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்துதல், பருவ நிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சூழல் அமைப்பு சேவைகளை வனங்கள் வழங்கி வருகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வனச்சூழலை பாதுகாத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீறிய முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் பல்வேறு துறைகள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் மக்களின் முழு அளவிலான பங்களிப்புடனும் பலதரப்பட்ட நம் மண் சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவு திட்டம் ஒன்று அடுத்த பத்து ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரைப்பை அதிகப்படுத்தும் நோக்கில் முற்கட்டமாக 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் இணைந்து 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டு மர வகைகள் கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும் அப் பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால் அதிக அளவில் நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்த இயக்கத்தின் கீழ் அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாய பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள்,

ஆற்றுப்படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும் மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர் ரக மரங்கள் சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்க படுவார்கள் இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள் கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்கள் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் உதவும் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்காள்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இலுப்பூர் வருவாய்த்துறைக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இலுப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள குளக்கரை, பள்ளி வளாகம், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் ஒரு சில நாட்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து இலக்கு முடிக்கப்படும் என்று வருவாய்த்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post புதுகை மாவட்டம் இலுப்பூர் வருவாய்த்துறைக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: