மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: மதுக்கடைகளை மூடுமா தமிழ்நாடு அரசு; ராமதாஸ்!

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி போதை தரும் மதுவை உற்பத்தி செய்வது, வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு இத்தீர்ப்பு பெரும் பாடம் ஆகும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலுக்கு வரி விதித்து, முறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா? என்பது குறித்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு மதுவை முறைப்படுத்தும் அதிகாரம் தொடர்பாக தெளிவான விளக்கங்களைத் தெரிவித்திருக்கிறது. அந்த விளக்கங்கள் தமிழகத்தின் சூழலுக்கு மிகவும் பொருந்தும்.

‘‘தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலின் தன்மை மாறுபட்டதாக இருந்தாலும் கூட, அடிப்படையில் அதுவும் போதை தரும் மது வகை தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள மாநிலப் பட்டியலில் எட்டாவது அம்சமாக போதை தரும் மது இடம்பெற்றுள்ளது. அதில் போதை தரும் மது வகைகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்குத் தான் வழங்கப் பட்டுள்ளன. இதில் தலையிட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுகுறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை’’ என்று 8 நீதிபதிகளின் சார்பில் எழுதப்பட்ட ஒருமனதான தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் எதிர்மறையானத் தீர்ப்பை வழங்கியுள்ள ஒரு நீதிபதியான நாகரத்தினா, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலும், போதை தரும் மதுவும் ஒன்றல்ல என்று கூறியிருந்தாலும் கூட, போதை தரும் மதுவை கட்டுப்படுத்தும் அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு மட்டும் தான் உள்ளது; அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்ற 8 நீதிபதிகளின் பார்வையை தாமும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மது மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சி பல பத்தாண்டுகளாக தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் அரசியல் சட்ட வல்லுனர்கள் தான், இவை எதையும் புரிந்து கொள்ளாமல், ‘‘தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. இந்தியா முழுவதும் மது விலக்கை மத்திய அரசு கொண்டு வந்தால், அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்’’ என்று கூறி வருகின்றனர். மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மது வணிகம் செய்து ஆண்டுதோறும் ரூ.50,000 கோடி வருவாய் ஈட்டுபவர்கள், மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி 200&11 ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மது ஆலை உரிமங்களை வாரி வழங்கியவர்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டும் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான ஏமாற்று வேலை.

உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பின் மூலம் மத்திய அரசைக் காரணம் காட்டி மதுவிலக்கை மறுக்கும் திமுகவின் முகமூடி கிழிந்திருக்கிறது. இனியும் மத்திய அரசைக் காரணம் காட்டி திமுக அரசால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை மறுக்க முடியாது. தமிழ்நாட்டின் இன்றைய உடனடித் தேவை மது விலக்கு தான். மதுவின் காரணமாக மட்டும் தமிழ் நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தேசிய அளவில் அதிக விபத்துகள், அதிக தற்கொலைகள், அதிக மனநல பாதிப்புகள் நிகழும் மாநிலமாக தமிழ்நாடு தான் திகழ்கிறது. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது என்பதற்காக இவ்வளவு இழப்புகளை எதிர்கொள்ள வேண்டுமா? என்பது தான் அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் எழுப்பும் வினா ஆகும்.

மதுவால் கிடைக்கும் வருமானம் தான் ஆட்சியாளர்களுக்கு பெரிதாக தெரிகிறதே தவிர, அதனால் ஏற்படும் இழப்புகள் தெரிவதில்லை. மதுவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மருத்துவம் அளிப்பதற்காக மட்டும் சுமார் ரூ.90 ஆயிரம் கோடி செலவு செய்ய நேரிடும். அதுமட்டுமின்றி, மதுவுக்கு அடிமையாகும் மக்கள் பணி செய்யத் தவறுவதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு 20% உற்பத்தி பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.6.30 லட்சம் கோடி இழப்பு ஏற்படக்கூடும். இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் அதிகரிப்பதற்கு மது வணிகம் தான் முதன்மைக் காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், அதற்கான முதல் தேவை மதுவிலக்கு தான். மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இனியும் மத்திய அரசைக் காரணம் காட்டிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என்று கூறியுள்ளார்.

 

The post மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: மதுக்கடைகளை மூடுமா தமிழ்நாடு அரசு; ராமதாஸ்! appeared first on Dinakaran.

Related Stories: