தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது: அமைச்சர் சிவசங்கர் உறுதி

சென்னை: கடந்த 2 ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது கட்டண உயர்வு இல்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கட்டணம் வசூல் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இணை ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக்கு பின்னர், அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் ஆம்னி பேருந்து மூலமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு சுமுகமான பயணத்தை மேற்கொள்ள வசதியாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2 தீபாவளியின் போதும் எந்தவித கட்டண உயர்வும் இல்லாமல் பேருந்துகளை இயக்கினர். பெருமளவில் எங்கும் புகார் இல்லை. ஓரிரு இடங்களில் வந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் தீபாவளியின் போது கட்டண உயர்வு இல்லாமல் பேருந்துகளை இயக்குவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இணையதளங்கள் மற்றும் செயலிகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது பேருந்து உரிமையாளர்கள் செய்யும் வேலை இல்லை.

சில தனியார் செயலிகள், புதிதாக பேருந்து வாங்குபவர்கள் செய்யும் வேலை. இது தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் செயலியையும் உட்கார்ந்துகொண்டு கண்காணிக்க முடியாது. புகார் வரும்போது நடவடிக்கை எடுப்போம். விருப்பப்பட்டு கூடுதல் பணம் கொடுத்து பயணம் செய்பவர்கள் புகார் கூறுவதில்லை. சொகுசான பயணம் வேண்டும் என்பவர்கள் புகார் கொடுப்பதில்லை. தீபாவளியை முன்னிட்டு 1000 பேருந்துகளை இயக்க தனியாரை தயாராக இருக்க சொல்லி இருக்கிறோம். இந்த பேருந்துகள் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது: அமைச்சர் சிவசங்கர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: