மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் முன்னேறி வரும் தமிழ்நாடு: 2020ம் ஆண்டில் 1 லட்சம் குழந்தைகள் இறப்பு 54 ஆக குறைப்பு; அடுத்த 2 ஆண்டுகளில் இறப்பு விகிதத்தை 10 ஆக குறைக்க இலக்கு; 7 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட பிரத்யேக குழு அமைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான மாநில அளவிலான பணிக்குழு தொடர்பான ஆணை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் வெளியிடப்பட்டது. இந்த மாநில பணிக்குழுவின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம், மகப்பேறு இறப்பு தொடர்பான மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து, மாநிலத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தினை குறைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்தது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் தலைமையிலான இப்பணிக்குழுக் கூட்டத்தில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் துறையின் இதர அதிகாரிகள் கலந்து கொண்டனர். மகப்பேறு இறப்பு விகிதம் என்பது உயிருடன் பிறந்த 1 லட்சம் குழந்தைகளில், தாய் இறப்பின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. உலகளவில், மகப்பேறு இறப்பு உலகளவில் குறிப்பிடத்தக்க ஒரு பொது சுகாதார பிரச்னையாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளாவிய அளவில் 2020ம் ஆண்டில் 1 லட்சம் பிறப்புகளில் இறப்பு விகிதம் 223 ஆக இருந்தது. நிலையான வளர்ச்சி இலக்கு 3ன் படி 2030ம் ஆண்டிற்குள் உலக அளவில் மகப்பேறு இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 70க்கு குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்து வருகிறது. 2020ம் ஆண்டின் சமீபத்திய மாதிரி பதிவு முறை தரவுகளின்படி, தமிழ்நாட்டில், மகப்பேறு இறப்பு விகிதம், உயிருடன் பிறக்கும் 1 லட்சம் குழந்தைகளில் மகப்பேறு இறப்பு 54 ஆக குறைந்துள்ளது.

இது தேசிய சராசரியான 1 லட்சத்துக்கு 97 என்பதை விட மிகக் குறைவு. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கேரளாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 19ஆக உள்ளது, அதே சமயம், மகாராஷ்டிரா 33, தெலங்கானா 43, ஆந்திரப் பிரதேசம் 45, ஜார்கண்ட் 130, குஜராத் 57 மற்றும் இதர மாநிலங்களில் மகப்பேறு இறப்பு விகிதம் வெவ்வேறு வளர்ச்சி நிலையினை காட்டுகிறது. தமிழ்நாடு, 2004ம் ஆண்டிலேயே மகப்பேறு இறப்பிற்கான காரணங்களைக் கண்டறிய, மகப்பேறு இறப்பு தணிக்கைக்கான ஆணை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் வெளியிடப்பட்டு, மகப்பேறு இறப்புக்கான முக்கிய காரணங்களையும் தீர்வுகளையும் கண்டறிவதற்காக விரிவான தணிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு இறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில், 5 முக்கிய காரணிகள் உட்பட பல காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை: பிரசவத்திற்கு பிந்தைய ரத்தப்போக்கு (20%), கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்த கோளாறுகள் (19%), செப்சிஸ் (10%), இதய நோய் (9%), கருக்கலைப்பு (4%) பிற நோய்கள் (38%) ஆகியனவாகும். இக்கூட்டத்தில், பணிக்குழு, முக்கியமான சவால்கள், தரவுத் தொகுப்புகளை ஆய்வு செய்ததில் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் 74.25% மகப்பேறு இறப்புகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர் தமிழ்நாட்டில், மகப்பேறு இறப்பு விகிதத்தினை குறைப்பது குறித்து விரிவான விளக்கத்தை அளித்தார். இக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

அவை: விரிவான பிறப்புக்கு முந்தைய திட்டமிடல் தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 13.8 என்ற நிலையில், மாநிலத்தில் சுமார் 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்ககம், ஒவ்வொரு பிரசவத்திற்கும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் மகப்பேறு தரவு ஆகியவற்றின் அடிப்படையில் விரிவான முன் பிறப்பு திட்டமிடல் நடைமுறையை செயலாக்க வேண்டும் என்ற பணிக்குழு முடிவு செய்தது.

திட்டமிடப்பட்ட வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு நடைபெற தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர், ரத்தம், மருந்துகள் போன்றவற்றின் இருப்பு உள்ளிட்ட ஆதாரங்களை கவனமாக கண்காணிக்க பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அனைத்துப் மகப்பேறுகளும் அதிக ஆபத்துள்ள மகப்பேறாக இருக்கலாம் என்ற வகையில் ஆய்வு செய்து நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட ஆபத்து காரணிகளுடன், எந்தவொரு அவசரநிலையையும் கவனித்துக் கொள்வதற்கு மேம்படுத்தப்பட்ட CEmONC மையங்களில் மட்டுமே பிரசவத்திற்கு திட்டமிடப்படல் வேண்டும்.

விரிவான முன் பிறப்புத் திட்டமிடலில் கவனம் செலுத்தும் வகையில், மகப்பேறு இறப்புகளைக் குறைப்பதற்காக, 7 மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட பிரத்யேக குழு ஒன்றை தேசிய சுகாதார இயக்கக அலுவலகத்தில் அமைத்து, 24 மணிநேரமும், 7 நாட்கள் சுழற்சி அடிப்படையில் (24*7) ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படும். தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 54க்கு மேல் உள்ள மாவட்டங்களுக்கு வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டு வர பணிக்குழு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் மூத்த மகப்பேறு மருத்துவர் தலைமையிலான சிறப்புக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்படும்.

தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஆரம்பகால பரிந்துரைகள், பாதுகாப்பான கருக்கலைப்பு நடைமுறைகள், துறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு, சுகாதார வசதிகளின் தரச் சான்றிதழ் மற்றும் அரசு மற்றும் தனியார் துறை சுகாதார வசதிகளில் பொறுப்புணர்வை அறிமுகப்படுத்துதல் தொடர்பான பல ஆலோசனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. மகப்பேறு இறப்புக்கான காரணங்கள் மற்றும் இடங்களைப் புரிந்து கொள்வதில் மகப்பேறு இறப்பு தணிக்கை கருவியாக இருந்தாலும், மாநிலத்தின் கவனம் தற்போது உயிர்களைக் காப்பதில் திரும்பியுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள், குறித்த நேரத்தில் தலையீடுகள் மற்றும் அனைத்து பெண்களுக்கும் கர்ப்பம் மற்றும் மகப்பேறு காலம் முழுவதும் தேவையான கவனிப்பை உறுதி செய்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகித அளவை 10-க்கும் கீழ் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பணிக்குழு உறுதியளித்தது.

* கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் அதிகம்
2014-24 வரையிலான தரவுகளின்படி, 72% இறப்புகள் கிராமப்புறங்களிலும் 28% இறப்புகள் நகர்ப்புறங்களிலும் நிகழ்ந்துள்ளன. தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, தேனி, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், மகப்பேறு இறப்பு விகிதம் 55க்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டு, அம்மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு விகித விவரங்களை பணிக்குழு ஆய்வு செய்தது.

The post மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் முன்னேறி வரும் தமிழ்நாடு: 2020ம் ஆண்டில் 1 லட்சம் குழந்தைகள் இறப்பு 54 ஆக குறைப்பு; அடுத்த 2 ஆண்டுகளில் இறப்பு விகிதத்தை 10 ஆக குறைக்க இலக்கு; 7 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட பிரத்யேக குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: