இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது: சீனா உற்சாகம்

பீஜிங்: ரஷ்யாவின் கசானில் நடந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு, இரு தரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முக்கியமான பொதுவான புரிதல்களை எட்டியதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் இடையே, 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பை சீனா எப்படி பார்க்கிறது என சீன தலைநகர் பீஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியானிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இரு தலைவர்கள் சந்திப்பின் போது, சீனா-இந்தியா உறவுகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இருதரப்பு உறவை மீண்டும் நிலையான வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்லவும் முக்கியமான பொதுவான புரிதல்கள் எட்டப்பட்டுள்ளன. எனவே இந்த சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சீனா கருதுகிறது.

இரு தரப்பு உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், தொலைநோக்கு பார்வையுடன் கையாளவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. எல்லைப் பிரச்னையில் சிறப்பு பிரதிநிதிகளை நன்றாக பயன்படுத்தவும், எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், நியாயமான தீர்வை கண்டறியவும், வளரும் நாடுகளின் பொதுவான நலன்களை பாதுகாக்கவும், பலதரப்பு அமைப்புகளின் தொடர்பு, ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு லின் ஜியான் கூறினார். இதன் மூலம் விரைவில் இந்தியா, சீனா பல்வேறு துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்கான உயர்மட்ட நடவடிக்கைகளுடன் இருதரப்பு உறவை புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* சபாஷ் புடின்
பிரிக்ஸ் மாநாடு முடிந்ததைத் தொடர்ந்து, பிரிக்ஸ் பிளஸ் நாடுகளின் கூட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் நேற்று தலைமை தாங்கி நடத்தி வைத்தார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பல்வேறு தடைகளை விதித்து உலக அரங்கிலிருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்த முயற்சித்தன. ஆனால் பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அந்த அமைப்பை மேலும் வலுவான அமைப்பாக்கி, இந்தியா, சீனா இடையேயான பிரச்னையை சமரசம் செய்து வைத்து, மேற்கத்திய நாடுகளின் முயற்சியை தவிடுபொடியாக்கி உள்ளார் புடின்.

The post இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது: சீனா உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: