பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!

நன்றி குங்குமம் தோழி

இந்தியா முழுதும் குதூகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. புத்தாடைகள், பட்டாசுகள், பண்டங்கள் தீபாவளிக்கே உரித்தானதாக இருந்தாலும், இந்தப் பண்டிகை பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான வழிபாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதே போல் இந்திய பழங்குடியினரின் தீபாவளி கொண்டாட்டமும் சற்று வித்தியாசமாகவே உள்ளது. இந்தச் சமூகத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் எளிமையாகவும் அவர்களின் வாழ்க்கை கலாச்சாரங்களைபறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

குஜராத் மாநிலம், நர்மதா மற்றும் பரூச் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தினர் 15 நாட்களுக்கு தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இவர்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. மாறாக பலவித மூலிகை மரங்களை எரிக்கிறார்கள். அதில் இருந்து வெளியாகும் புகை காற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் என்றும், அதை சுவாசிக்கும் மக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை. கடவுளுக்கு தானியங்களை படைத்து வழிபடுகிறார்கள். மேலும் அன்றாடம் பால் கொடுக்கும் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்கள். தொடர்ந்து மரங்கள், ஆறு, குளம், கிணறு போன்றவற்றையும் வழிபடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களை ஆடி மகிழ்வார்கள். தானியங்களை விளைவித்து தரும் பூமியையும் மழையை தரும் வானத்தையும் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

‘கடின உழைப்பு செல்வத்தை தரும், கடின உழைப்பிற்கு உடல் ஆரோக்கியம் தேவை’ என்ற நோக்கத்துடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினர் மூன்று நாட்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். ‘தியரி’ என்றழைக்கப்படும் சம்பிரதாய முறையில் பயிர்கள், தானியங்களை கூடை முழுதும் நிரப்பி தங்களது வழிபாட்டை தொடங்குகின்றனர். இந்த மூன்று நாட்கள் அனைவரின் வீடுகளிலும் தானியங்கள் நிரப்பி வைக்கும் சடங்குகள் நடைபெறும். கால்நடைகளுக்கு மாலை அணிவித்து அலங்காரம் செய்து வழிபட்டு, கால்நடை உரிமையாளர்கள் மற்றும் மேய்ப்பவர்களை சிறப்பித்து கஞ்சி உணவினை வழங்குவார்கள். இவர்கள் பயிர்களை கடவுளாக கருதுகிறார்கள். இவர்களின் தீபாவளி அறுவடையை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

மஹாராஷ்டிரா வனப்பகுதிகளில் வசிக்கும் தக்கர் பழங்குடியின சமூகத்தினர் பாரம்பரியமான நாட்டுப்புற நடனங்களை ஆடியும் பாடல்களை பாடியும் மகிழ்வர். சிப்ரா பழத்தின் காய்ந்த பகுதியிலிருந்து விளக்குகளை பசு சாணத்தினால் செய்யப்பட்ட தட்டின் மேல் வைத்து, தீபத்தினை ஏற்றி, கூடையில் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களை கடவுளாக கருதி வழிபடுகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜான்சர்-பவார் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் நெல் மற்றும் மண்டுவா தினை அறுவடையை தான் தீபாவளி திருநாளாக கொண்டாடுகின்றனர். பயிர்களின் அறுவடை முடிந்த பிறகு வயல் வெளிப்பகுதிகளில் தீபங்களை ஏற்றி அந்த இடத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினர், தங்கள் முன்னோர்களின் ஆசிகளை பெற தீபாவளியை கொண்டாடுகின்றனர். இறந்த முன்னோர்கள் வேறு எங்கேயோ வாழ்வதாக நம்புகிறார்கள். முன்னோர்களின் ஆசியை வேண்டி சணல் தண்டுகளை எரித்து கௌன்ரியா கதி சடங்கினை நடத்துகின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தில் டீ ட்ரைப் சமூகத்தினர் கார்த்திகை மாதத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். வாழை மரத்தை சுற்றி பாடல் பாடிக்கொண்டே ‘ஜாலி’ என்ற பாரம்பரிய நடனத்தை ஆடுவார்கள். அந்த வருட அறுவடை சிறப்பாகவும், அமைதியையும், உடல் ஆரோக்கியம், செல்வமும் தழைக்க இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். சமூகத்தின் ஆண்கள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ‘ஜாலி’ எனப்படும் நடனத்தை ஆடி அவர்கள் நலம் பெற வழிபடுகின்றனர். பழங்குடியின சமூகத்தினர் பெரும் பாலும் தீபாவளியை தானியங்கள், பயிர்கள், கால்நடைகள், இயற்கை போன்றவற்றை சிறப்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

The post பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி! appeared first on Dinakaran.

Related Stories: