இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தொடர்ச்சியாக மழை பெய்யாததால் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள சில நீரோடைகளில் தண்ணீர் இல்லாமலும் சில நீரோடைகளில் குறைந்த அளவு தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையினால் நீரோடைகளில் தண்ணீர் பெருமளவு வருகிறது. தொடர்ச்சியாக மழை பெய்தால் நீரோடைகளில் வரும் தண்ணீர் மூலம் மம்சாபுரம் பகுதியில் உள்ள வாழைக்குளம் கண்மாய் மற்றும் வேப்பங்குளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. இது கண்மாய் பாசன விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.
வத்திராயிருப்பு: இதேபோல் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணை மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணையை நம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ள கொடிக்குளம், பெரியகுளம், விராடசமுத்திரம், பூரிபாறைகுளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த பத்து நாட்களில் 8 அடி வரை நீர் மட்டம் உயர்ந்து தற்போது அணையின் நீர்மட்டம் 30 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 46 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை: பிளவக்கல் அணை நீர்மட்டம் 8 அடி உயர்வு appeared first on Dinakaran.