அரசு மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா

திருவள்ளூர், அக். 24: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கியை கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் திலகவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உடற்கூற்றியல் துறை தலைவர் கனகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் வெள்ளை அங்கி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: வெள்ளை அங்கி உடுத்தும் பழக்கம் நாங்கள் பயிலும் காலத்தில் இல்லை. தற்பொழுது தான் வெள்ளை அங்கி அணியப்பட்டு வருகிறது. மருத்துவ துறை சார்ந்த படிப்பு என்பது மிகச் சிறப்பு வாய்ந்த படிப்பாகும். இந்த படிப்பினை படிப்பதற்கு நீங்கள் வந்த பயணம் கடினமானது. அந்த பயணத்தினை சிறந்த முறையில் அடைந்துள்ளீர்கள். மருத்துவ துறைச் சார்ந்த படிப்பில் சேருவதற்கு பல கனவுகளுடன் இருந்துருப்பீர்கள். தற்போது, இந்தியாவில் 108400 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதாவது, ஒரு மருத்துவருக்கு 1000 என்ற விகிதத்தில் இருக்கும் வேளையில், தற்போது, ஒரு மருத்துவருக்கு 253 என்ற விகிதத்தில் உள்ளது.

எனவே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் பேராசிரியர்கள் கொடுக்கின்ற கருத்துகளை கற்றுக் கொள்வதற்கு உங்கள் நேரத்தினை செலவிட வேண்டும். மருத்துவ துறையில், உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பேராசிரியர்களும் தங்க சுரங்கம் போல், அவர்கள் சேர்ந்து வைத்துள்ள மருத்துவ பாடங்களை தேனீக்கள் போல் உறிஞ்சி உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், அரசுப்பள்ளியில், தமிழ் வழியில், பயின்று மருத்துவ துறைக்கு நுழைந்துள்ள மாணவர்களை மதிக்க வேண்டும். உங்களை அணுகும் நோயாளிகளை அன்புடன் பணிவுடன் மதித்து உங்கள் சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளை அங்கியை உடுத்துவதனால் நாம் பெருமை கொள்ள வேண்டும். இந்த வெள்ளை அங்கி உடை உங்களுக்கு பெருமை அளிக்க வேண்டும். நீங்களும் வெள்ளை அங்கி உடைக்கு பெருமை சேர்க்க வேண்டும். வெள்ளை அங்கி அணிவதன் மூலம் கர்வம் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும். 100 இளநிலை மருத்துவ மாணவர்களில் 6 மாணவர்கள் அரசு பள்ளியில் பயின்று கிராமப்புற மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளார்கள் என பேசினார். தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் மருத்துவர்களில் கடமைகள் மற்றும் நன்னடத்தை அமைக்கும் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இதில் மற்றும் பேராசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: