சென்னை மாநகராட்சியுடன் வானகரம்- அடையாளம்பட்டு கிராம ஊராட்சிகள் இணைகிறது: 442 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் அடையும்

திருவள்ளூர்: சென்னை மாநகராட்சியுடன், வானகரம் – அடையாளம்பட்டு கிராம ஊராட்சிகள் இணைகிறது. இதனால் மாநகராட்சி எல்லை 442 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் அடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே. மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்தில்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஒரு மாநகராட்சி இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 24 மாவட்டங்களில் 25 மாநகராட்சிகள் உள்ளன. ஆகவே மீதம் உள்ள 14 மாவட்டங்களிலும் மாநகராட்சிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் தற்போது உள்ள மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளது. அதன்படி சென்னை மாநகரட்சியும் விரிவுபடுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியானது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 66.72 லட்சம் மக்கள் தொகையையும், 426 சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்டதாகும்.

தற்போதுள்ள சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்விரு கிராம ஊராட்சிகளின் பரப்பளவு சுமார் 15.77 சதுர கி.மீ. ஆகும் மற்றும் மக்கள் தொகை சுமார் 32,353 ஆகும். இவ்விணைப்பிற்கு பிறகு சென்னை மாநகராட்சியின் எல்லை சுமார் 442 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் அடையும் மற்றும் மொத்த மக்கள் தொகை 67,04,455 ஆக அதிகரிக்கும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள 2 கிராம ஊராட்சிகள் இணைப்பால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன் அடிப்படை வசதிகளும் மேம்படும்.

இது தொடர்பாக மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி அதன் அதிகார வரம்பில் வானகரம் மற்றும் அடையாளம்பட்டு ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துக்களை சேர்த்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்த முடிவு நேற்று எடுக்கப்பட்டது. இங்கே ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஐடி நிறுவனங்களின் வருகை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை மாநகராட்சியுடன் வானகரம்- அடையாளம்பட்டு கிராம ஊராட்சிகள் இணைகிறது: 442 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் அடையும் appeared first on Dinakaran.

Related Stories: