ஆர்.கே.பேட்டை அருகே சோகம் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் விவசாயி பலி: உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் விசாரணை

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் விவசாயி பரிதாபமாக பலியானார். இதில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.கே.பேட்டை தாலுகா, வெள்ளத்தூர் கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த, கல்லூரியில் ஆர்.கே.பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து மூலம் மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மாணவர்களை கல்லூரி அழைத்து வர கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, ஆர்.கே.பேட்டை அடுத்த யு.யு.ஆர். கண்டிகை கிராமத்திற்குச் சென்றது. அங்கு, மாணவர்களை ஏற்றுக்கொண்டு கல்லூரி பேருந்து வந்தபோது, சாலையோரத்தில் பைக்கில் நின்று கொண்டிருந்த, அதே கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுப்புராஜ் (56) என்பவர் மீது பேருந்து மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த சுப்புராஜ் மீது கல்லூரி பேருந்து ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த சுப்புராஜின் உறவினர்கள் கல்லூரி பேருந்தை சிறைபிடித்து, கே.ஜி.கண்டிகை – பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் ஆர்.கே.பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர், சுப்புராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குபதிவு செய்து கல்லூரி பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே சோகம் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் விவசாயி பலி: உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: