கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் மதுவிலக்கு காவல் நிலையம் அமைக்கப்படுமா?

*மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் மதுவிலக்கு காவல் நிலையம் அமைக்க விழுப்புரம் சரக டிஐஜி நடவடிக்கை எடுப்பாரா? என்று பொதுமக்கள்
மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் 15 ஊராட்சிக்கு உட்பட்ட 171 மலை கிராமங்கள் உள்ளன. அங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் ஒரு அடர்ந்த வனப்பகுதியாக இந்த கல்வராயன்மலை உள்ளது. கல்வராயன்மலை தரை மட்டத்திலிருந்து சுமார் 2,000 அடி உயரத்திலும் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்து உள்ளதால் இந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்ததால் 68 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு படை காவலர்கள் அதிரடியாக சோதனை செய்து வந்ததையடுத்து அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவது முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் ஒரு சில பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணி தொடங்கியதையடுத்து கரியாலூர் போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டிய மதுவிலக்கு காவல் நிலையம் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வரஞ்சரம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், கரியாலூர், கீழ்குப்பம் உள்பட 7 காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களையும் மதுவிலக்கு காவல்துறையினர் கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் மதுவிலக்கு காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இந்த காவலர்கள் கள்ளக்குறிச்சி உட்கோட்ட பகுதியில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகர பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ள கல்வராயன்மலைக்கு சென்று அங்கிருந்து வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு சென்று கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்றால் ஒரு நாள் ஆகிவிடுகிறது.

போலீசார் கல்வராயன்மலைக்கு சென்று அங்கு தகவல் சேகரிப்பது கடினமாகவே இருந்து வருகிறது. ஆகையால் கல்வராயன்மலையில் தொடர்ந்து நடைபெறும் கள்ளச்சாராய ஊறலை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில் கல்வராயன்மலையிலேயே மதுவிலக்கு காவல் நிலையம் ஒன்று புதியதாக தொடங்கி செயல்பட்டால் கள்ளச்சாராய ஊறல்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். மேலும் கள்ளச்சாராயத்தை வெளிமாவட்டத்துக்கு கடத்துவதையும் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே கள்ளச்சாராயத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் கல்வராயன்மலை பகுதியில் புதியதாக மதுவிலக்கு காவல் நிலையம் அமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் மதுவிலக்கு காவல் நிலையம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: