பாம்பன் புதிய ரயில் பாலம் நவம்பர் மாதம் திறக்கப்படும்: தென்மண்டல பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டி

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் நவம்பர் மாதம் திறக்கப்படும் என தென்மண்டல பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாக் ஜலசந்தி கடலில் ரூ.550 கோடி செலவில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தியாவின் முதல் வெர்டிகிள் தூக்குப்பாலமான இதில் நடந்து வரும் சோதனைகளும் சில தினங்களில் நிறைவடைகிறது. பொறியியல், எலெக்ட்ரிக்கல், சிக்னல், சென்சார் சிஸ்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சோதனையின் போது கண்டறியப்பட்ட திருத்தங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த மாதத்தில் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. பாம்பன் கடலில் புதிதாக கட்டிய ரயில் பாலத்தின் பணிகள் குறித்து தென்மண்டல பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பாம்பன் புதிய ரயில் பாலம் நவம்பர் மாதம் திறக்கப்படும். பாம்பன் புதிய ரயில் பாலத்தின் நடுப்பகுதியான தூக்கு பாலம் இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது. கடலின் நடுவே உள்ள ரயில்வே செங்குத்து தூக்குப்பாலத்தின் இயக்கம் சிறப்பாக உள்ளது. சி.ஆர்.எஸ். தகுதி பார்க்கும் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது.

ராமேஸ்வரம் – மண்டபம் பகுதியை இணைக்கும் புதிய பாம்பன் பாலம் வரும் நவம்பர் மாதம் திறக்கப்பட்டு, ரயில் சேவை மீண்டும் தொடங்கும். தற்போது ஒரு வழிப்பாதையில் மட்டும் ரயில் பயணிக்கும். அதிகமான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்க நேர்ந்தால், 2வது வழித்தட பணி மேற்கொள்ளப்படும். பாம்பன் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் வைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவு செய்யும் என்று கூறினார்.

 

The post பாம்பன் புதிய ரயில் பாலம் நவம்பர் மாதம் திறக்கப்படும்: தென்மண்டல பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: