தம்மனூர் நத்தம் புறம்போக்கு பகுதியில் 25 ஆண்டுகளாக வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: தம்மனூர் நத்தம் புறம்போக்கில், 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களின் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தம்மனூர் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் புறம்போக்கு பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

நத்தம் புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் பலமுறை வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கிராமமக்களின் கோரிக்கை மனு மீது வாலாஜாபாத் தாசில்தார் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தம்மனூர் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து, நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களின் வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும், ஏற்கனவே சொந்தமாக வீடு உள்ள நிலையில் தம்மனூர் கிராமத்தில் பல பேருக்கு வருவாய்த்துறையினர் வீட்டுமனை பட்டா வழங்கி குளறுபடி செய்து உள்ளதாகவும், 25 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்காமல் உள்ளதாகவும் தெரிவித்தனர். கிராம மக்களின் கோரிக்கையை கேட்ட மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், கிராமமக்கள் வழங்கிய கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பட்டா வழங்குவதில் குளறுபடி குறித்தும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post தம்மனூர் நத்தம் புறம்போக்கு பகுதியில் 25 ஆண்டுகளாக வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: