திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணி: 10 குழுக்களாக வருவாய்த்துறையினர் தீவிரம், மூன்று நாட்களில் அடுத்தகட்ட நடவடிக்கை

பூந்தமல்லி: திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 10 குழுக்களாக 50 பேர் கொண்ட வருவாய்த்துறையினர் தீவிரமாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 நாளில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி பூந்தமல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் முதல்கட்டமாக கடந்த 2 நாட்களாக புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள், கட்டுமானங்கள் என மொத்தம் 27 வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2 முறை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தற்போது கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த ஏரியில் சுமார் 1500 வீடுகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பூந்தமல்லி வருவாய்த்துறையினர் ஒரு குழுவிற்கு 5 பேர் வீதம் 10 குழுக்களாக 50 பேர் ஏரி பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அளவீடு செய்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தநிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 நாட்களில் கணக்கெடுப்பு பணி முடிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்படும் என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கோலடி ஏரியில் 25க்கும் மேற்பட்ட வீடுகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றியதால் பதறிப்போன அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை இடிக்கக்கூடாது எனவும், வீடுகளை இடிக்கும் பட்சத்தில் பள்ளி மாணவர்கள் எதிர்காலம், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி கோலடி ஏரி பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளியில் பயிலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உடன் அழைத்துவந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தனர்.

மேலும் தங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம். மீறி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தனர். இதனால் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அவருக்கு அருகிருந்த பெண் காவலர் ஒருவர் முகத்தில் தண்ணீரைத் தெளித்து ஆசுவாசப்படுத்தி ஓரமாக அமர வைத்தார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கையெடுத்து கும்பிட்டு தங்களது வீட்டை இடிக்கக்கூடாது என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணி: 10 குழுக்களாக வருவாய்த்துறையினர் தீவிரம், மூன்று நாட்களில் அடுத்தகட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: