சிஆர்பிஎப் பள்ளி அருகே பயங்கரம் டெல்லியில் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகள் சதியா? என்ஐஏ அதிரடி விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி வளாகம் அருகே நேற்று காலை வெடிகுண்டு வெடித்தது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள், கார்கள் உள்ளிட்டவை அதிர்ந்தன. விடுமுறை நாளில் இந்த குண்டு வெடித்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தீவிரவாதிகள் சதி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் இதுவரை நாட்டில் இல்லாத வகையில் ஒரேநாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே மெயிலில் இருந்து விடுக்கப்பட்ட மிரட்டலாகும். இதனை தொடர்ந்து சமீப நாட்களாக நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக டெல்லி, பெங்களூரூ உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் இருந்து புறப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அவை போலி என தெரிந்தாலும், விமான நிறுவனங்களுக்கும், அரசுக்கும் பெரும் சிக்கலையும், பயணிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பாதி வழியிலே தரையிறக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இது, பெரும் பொருளாதார சிக்கலையும் ஏற்படுத்துகிறது. இந்த மிரட்டல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதில், தீவிரவாதிகள் சதி இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. ரோகினி பகுதியில் உள்ள பிரசாந்த் விகாரில் சிஆர்பிஎப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் பல நூறு மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே நேற்று காலை 7.50 மணியளவில் திடீரென ஒரு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழந்தது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் அங்குள்ள கடைகளில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின. இந்த வெடிகுண்டின் தாக்கம் 250 மீட்டர் வரை அதிர்வை ஏற்படுத்தியது. அதில் இருந்து அழுகிய துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

வெடிகுண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி), மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎப்) மற்றும் டெல்லி காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் சோதனை நடத்தினர்.

ஆனால், வேறு எந்த இடங்களிலும் வெடிகுண்டுகளோ அல்லது எந்தவிதமான மர்ம பொருட்களோ கிடைக்கவில்லை. தேசிய பாதுகாப்பு படை, தடயவியல் துறை அதிகாரிகள் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சோதனை நடத்தினர். அதில், வெள்ளை நிறத்திலான பவுடரை எடுத்து சோதனைக்காக ஆய்வகத்திற்கு கொண்டு சென்றனர். அந்த பவுடர் அமோனியம் நைட்ரேட், குளோரைடு கலவையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவை வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவில்லை. மேலும், அந்த பகுதியில் சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. இதனால், மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போனது. இந்த குண்டு வெடிப்பால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், என்ஐஏ.வும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வருகிற 31ம் தேதி டெல்லியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் ஏற்கனவே நகரின் முக்கியமான பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி சாணக்யாபுரியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வெடித்தது. அதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு தூதரகத்தின் அருகே நடந்த இந்த வெடிகுண்டு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

* நாட்டு வெடிகுண்டா?
மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிரசாந்த் விகாரில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து வெள்ளை நிறத்திலான பவுடரை தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர். அவை, அமோனியம் நைட்ரேட் மற்றும் குளோரைடு கலந்த கலவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இங்கு வெடித்தது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம். ஆனால், முழுமையான தகவல் தடயவியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகே தெரியும்,’ என்றார்.

* வெடித்த அதிர்ச்சியில்
தலை கவிழ்ந்த கேமிரா
பிரசாத் விகார் பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகி உள்ளது. அதில், நேற்று காலை 7.40 மணியளவில் சில இருசக்கர வாகனங்கள் அந்த பகுதியை கடந்து செல்கின்றன. அதன் பிறகே, அங்கு வெடிகுண்டு வெடித்துள்ளது. அப்போது, கருமையான நிறத்தில் புகை சூழ்ந்துள்ளது. 250 மீட்டர் வரை அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா கீழே சாய்ந்துள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post சிஆர்பிஎப் பள்ளி அருகே பயங்கரம் டெல்லியில் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகள் சதியா? என்ஐஏ அதிரடி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: