எதிர்ப்புகள் விலக பலி பீட பூஜை செய்த வைத்திலிங்கம்


சீர்காழி: எதிர்ப்புகள் விலக வேண்டி சீர்காழி கோயிலில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் பலி பீட பூஜை செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டை நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு, சிவன்-பார்வதி காட்சியளித்ததாக புராணம் கூறுகிறது. வாரந்தோறும் சட்டைநாத சுவாமிக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுக்ரவார பூஜை நடைபெறும். இரவு 9 மணி அளவில் தொடங்கும் பூஜை நள்ளிரவு 12 மணி வரை நடக்கும்.

பலிபீடத்திற்கு சிறப்பு பூஜை, மலைமீது அருள் பாலிக்கும் சட்டைநாத சுவாமிக்கு புனுகு சாத்தி பச்சைப் பயறு பாயசம், உளுந்து வடை நிவேதனம் செய்து தீபாராதனை காட்டப்படும். சுக்ரவார வழிபாட்டில் வாரந்தோறும் கலந்துகொண்டு வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். சட்ட சிக்கல்கள் தீரும், எதிர்ப்பு விலகும் என்பது ஐதீகம். இத்தகைய புகழ்பெற்ற சட்டைநாத சுவாமி கோயிலில் நேற்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அமைச்சர் வைத்திலிங்கம் பலி பீட பூஜையில் கலந்து கொண்டார்.

The post எதிர்ப்புகள் விலக பலி பீட பூஜை செய்த வைத்திலிங்கம் appeared first on Dinakaran.

Related Stories: