இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யக் கோரி சங்கர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சன் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், எந்த அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என்று சங்கர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற நடவடிக்கையை விமர்சிக்கலாம். ஆனால் அதில் தலையிடுவது தவறு. எங்களது நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள நாங்கள் இங்கு இல்லை.
நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எங்களது நடவடிக்கைகள் மூலமே எங்களுக்கான நற்பெயர் மதிப்பிடப்படும். அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் வழக்கறிஞராகவும் ஆர்.எஸ்.பாரதி போன்றோர் பொது வெளியில் பேசும்போது மிகவும் கவனமாக பேச வேண்டும். உள்நோக்கத்துடன் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக நினைக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மூலம் தங்களுக்கான மரியாதையை பெற முடியாது. ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதிபதியே மறுத்த நிலையில், தாங்கள் அதனை தொடர விரும்பவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
The post ஆர்.எஸ்.பாரதி மீது யூடியூபர் சங்கர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.