பருவமழை முன்னெச்சரிக்கை.. உணவு பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது; பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம்: தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்!!

சென்னை: வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; முக்கிய பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை படகுகள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகடலோரத்தில் இருந்து நாகை வரை மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களில் இன்றே மீட்பு படகுகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்கரை, சுற்றுலா தளங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு தேவையான ஜே.சி.பி மற்றும் நீர் இறைப்பான்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய ஜனரேட்டர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.15 முதல் 18-ம் தேதி வரை ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவை எண்ணிக்கைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் உடனே மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும். தங்கு தடையின்றி ஆவின் பால் மற்றும் பால் வினியோகத்தை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உணவு, அத்தியாவசிய பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை.. உணவு பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது; பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம்: தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: