வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை.. ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் 200 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதார இணை இயக்குனர்கள், கூடுதல் இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மழைக்கால நோய்கள், தொற்று, தொற்றா நோய் கண்டறிதல், கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 40 சுகாதார மாவட்டங்களை பிரித்து, ஒரு இணை இயக்குனருக்கு 5 சுகாதார மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் இயக்குனர் ஒருவருக்கு 10 மாவட்டங்கள் வீதம் 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை.. ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: