கவரைப்பேட்டை ரயில் விபத்து; ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும்: ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து நேரிட்டது. மைசூரில் இருந்து தர்பங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. 75 கி.மீ. வேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், ஏற்கனவே லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் மோதியது. பயணிகள் ரயிலின் எஞ்சினுக்கு பின்னால் இருந்த, பவர் பாக்ஸுடன் கூடிய சரக்குகள் வைக்கும் பெட்டியில் தீப்பிடித்தது.

சரக்கு ரயிலின் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்தன. ரயில் விபத்து நடந்த இடத்தில் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், ரயில் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ரயில் விபத்தில், 13 பெட்டிகள் தடம்புரண்டதால் 19 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ஒடிஷா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டையிலும் ரயில் விபத்து நடந்துள்ளது.

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை-ராகுல்

ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

 

The post கவரைப்பேட்டை ரயில் விபத்து; ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும்: ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: