ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி உள்ளது. மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை அடுத்து புதிய அரசு வரும் 15ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரோடு சிலர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இதனால் வரும் 15 ஆம் தேதி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. ஆளும் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ஹரியானாவில் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்பதும் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
The post ஹரியானாவில் புதிய பாஜக அரசு அக். 15ல் பதவியேற்பு appeared first on Dinakaran.