திருமலை : ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த போலீஸ்காரர் ஆன்லைனில் ரம்மி விளையாடி வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிரமோற்சவத்திற்கு பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏழுமலையான் கோயில் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் மொபைல் போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிரமோற்சவத்தில் அலைகடலென பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் போலீஸ்காரர் இப்படி அலட்சியமாக உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த போலீசார் ரம்மி விளையாடுவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தில் செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடிய போலீஸ் appeared first on Dinakaran.