அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை மிரட்டும் மில்டன் சூறாவளி: புயலுக்குள் விமானத்தில் சென்று தகவல் திரட்டிய ஆய்வாளர்கள்

ஃப்ளோரிடா: ஹெலின்ஸ் சூறாவளி பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிபயங்கர சூறாவளி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை நெருங்கி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவை தாக்கிய ஹெலின்ஸ் சூறாவளியால் 232 பேர் உயிரிழந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் மில்டன் என்ற அதிபயங்கர சூறாவளி உருவாகி ஃப்ளோரிடா மாகாணத்தை நெருங்கி வருகிறது.

நேற்று வகை 4 சூறாவளியாக மெக்ஸிகோவின் யுகாடான் தீபகற்பத்தை சூறாவளி கடந்தது. அப்போது மணிக்கு 180 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால் குடியிருப்பு பகுதிகள் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. அங்கிருந்து மெக்ஸிகோ வளைகுடாவை கடந்து சென்ற போது வகை 5 என்ற பயங்கர சூறாவளியாக வலுப்பெற்ற மில்டன் ஃப்ளோரிடா மாகாணத்தை நெருங்கி வருகிறது.

40 லட்சம் பேர் வசிக்கும் டாம்பாகுடா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தான் சூறாவளி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் இருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். சூறாவளி கரையை கடக்கும் போது அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதால் வீடுகளுக்குள் மழைநீர் செல்லாதவாறு மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஃப்ளோரிடாவில் உள்ள கடல்வாழ் உயிரின காட்சியகத்தின் தரைத்தளத்தில் உள்ள பென்குயின்களும், மேல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதனிடையே தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஆய்வாளர்கள் பி3 ஓரியான்ஸ் விமானத்தின் மூலம் புயலின் ஊடாக சென்று சூறாவளி குறித்து தகவல்களை திரட்டிய திக், திக் காட்சி வெளியாகியுள்ளது. அட்லாண்டிக் உருவான சூறாவளியில் மிக வேகமாக வலுப்பெற்ற 3வது சூறாவளி இதுவாகும்.

 

The post அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை மிரட்டும் மில்டன் சூறாவளி: புயலுக்குள் விமானத்தில் சென்று தகவல் திரட்டிய ஆய்வாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: