முவான் விமான நிலையத்தை விமானம் நெருங்கிய நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டிங் கியர் செயல்படவில்லை. இதனால் வழக்கமான லேண்டிங் சாத்தியமில்லை என்பதால் மாற்று ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். லேண்டிங் கியர் செயல்படாத போது விமானத்தின் சக்கரங்கள் வெளியில் வராது. இதன் காரணமாக, பெல்லி லேண்டிங் முறையில் விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்தார்.
பெல்லி லேண்டிங் என்பது, விமான சக்கரங்கள் வெளியே வராத சமயத்தில், விமானத்தின் முன்பகுதியை தரையில் உரசி விமானத்தை நிறுத்தும் முயற்சியாகும். மிகவும் சவாலான இந்த முயற்சியுடன் விமானம் மாற்று ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது, விமானம் தரையிறங்கியதுமே கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியபடி ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி வெடித்து சிதறி தீப்பிடித்தது.தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் விமானம் முழுவதும் தீ பரவியது.
1500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல் துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் விமானம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. விமானத்தின் வால் பகுதியை தவிர மற்ற அனைத்தும் எரிந்து சாம்பலாகின. மீட்பு முயற்சியின் மூலம் விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
உயிர் தப்பிய 2 ஊழியர்கள் விமானத்தின் அவசரகால வெளியேறும் பகுதியில் அமர்ந்திருந்ததால் காயத்துடன் தப்பியதாக தீயணைப்பு வீரர்கள் கூறி உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் 85 பேர் பெண்கள், 84 பேர் ஆண்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களின் பாலினம் அடையாளம் காண முடியவில்லை என மீட்புப் படையினர் கூறி உள்ளனர். இதுவரை 177 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு 88 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விமானத் தரவு மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர்களை ஆய்வு செய்து விபத்து மற்றும் தீ விபத்துக்கான காரணத்தை ஆராயும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஜூ ஜாங்-வான் கூறி உள்ளார். முதற்கட்ட விசாரணையில் விமானம் மீது பறவை மோதியதைத் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் லேண்டிங் கியர் செயல் இழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
விபத்துக்குள்ளான இந்த விமானம் 15 ஆண்டுகள் பழமையான போயிங் 737-800 ஜெட் விமானமாகும். இந்த விபத்தை தொடர்ந்து முவான் விமான நிலைய ஓடுபாதை ஜனவரி 1 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
‘‘இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று அவர் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
* மன்னிப்பு கேட்ட ஜெஜூ நிறுவனம்
இந்த விபத்தை தொடர்ந்து, பலியான பயணிகளின் குடும்பத்தினரிடம் ஜெஜூ ஏர் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தலை தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
மேலும், இந்த சம்பவத்தில் முழு பொறுப்பையும் உணர்வதாகவும், வழக்கமான சோதனைகளைத் தொடர்ந்து விமானத்தில் எந்த இயந்திரப் பிரச்னையும் இல்லை என்பதை நிறுவனம் உறுதிபடுத்தியதாகவும், விபத்திற்கான காரணம் குறித்த அரசு விசாரணைகளின் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் ஜெஜூ தலைவர் கிம் இ பயே கூறினார். இதே போல விசாரணைக்கு தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குவதாக போயிங் நிறுவனமும் கூறி உள்ளது.
* மற்றொரு விமானம் தீப்பிடித்ததால் பீதி
தென் கொரியா விமான விபத்து நிகழ்ந்த நிலையில், ஏர் கனடா விமானமும் தரையிறங்கும் போது தீப்பிடித்ததால் பெரும் பீதி ஏற்பட்டது. கனடாவின் நோவா ஸ்காடியாவின் கோப்ஸ் நகரின் ஹாலிபேக்ஸ் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் விமானம் தரையிறங்கிய போது அதன் சக்கரங்களில் ஒன்று சரியாக செயல்படவில்லை.
இதனால் விமானம் சமநிலையில்லாமல் 20 டிகிரி கோணத்தில் சரிந்து விமான இறக்கைகளில் ஒன்று தரையில் உரசியது. இதன் காரணமாக தீ ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய அவசரகால மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்களை விரைவாக வெளியேற்றினர். பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
* மோசமான விபத்துகள்
தென் கொரியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதற்கு முன், 1997ல் கொரியன் ஏர்லைன் விமானம் குவாமில் விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தில் இருந்த 228 பேரும் பலியாகினர். மேலும், உலக அளவில் 2007க்குப் பிறகு நடந்த மிக மோசமான தரையிறங்கும் விபத்துகளில் இது ஒன்றாகும்.
2007 ஜூலையில், சாபாலோவில் ஏர்பஸ் ஏ 320 விமானம் விமான நிலையத்திற்கு அருகில் இருந்த கட்டிடத்தின் மீது மோதி விமானத்தில் இருந்த 187 பேரும், கட்டிடத்தின் அருகே இருந்த 12 பேரும் உட்பட 199 பேர் பலியாகினர். மேலும், 2010ம் ஆண்டில் மங்களூரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையை கடந்து, பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 158 பேர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
* நிபுணர்கள் எழுப்பும் கேள்விகள்
இந்த விபத்தில் முன்னாள் விமானிகளும், சர்வதேச நிபுணர்களும் முக்கியமாக 3 கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
* முவான் விமான நிலைய ஓடுபாதை 3 கிமீக்கும் குறைவான நீளம் கொண்டது. அதில் அதிவேகமாக விமானத்தை தரையிறக்கியது ஏன்?
* பெல்லி லேண்டிங் செய்ய திட்டமிடும் போது, விமானம் தீப்பிடிக்க அதிகப்படியான சாத்தியம் உள்ளது. எனவே தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்ட பிறகு பெல்லி லேண்டிங் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இங்கு தீயணைப்பு வீரர்கள் யாருமின்றி பெல்லி லேண்டிங் முயற்சிக்கப்பட்டது ஏன்?
* பொதுவாக விமானத்தில் கோளாறு ஏற்பட்டால் அதற்கான தீர்வு குறித்து யோசிக்க நேரம் எடுத்துக் கொள்வதற்காக விமானத்தை வானில் பலமுறை வட்டமடிப்பது வழக்கம். ஆனால், முவான் சம்பவத்தில் முதல் முயற்சி வழக்கமான லேண்டிங்கிற்கும், அடுத்ததாக மாற்று ஓடுபாதையில் பெல்லி லேண்டிங்கிற்கும் என மிக அவசரமாக முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தி உள்ளனர். இந்த அவசரம் ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
* கதறிய குடும்பத்தினர்
விமானத்தில் 175 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். பயணிகளில் 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள். விபத்து தகவல் அறிந்ததும், பயணிகளின் குடும்பத்தினர் முவான் விமான நிலையத்தில் குவிந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் பயணிகள் அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தென் கொரியாவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ஓடுபாதையில் இருந்து விலகி தடுப்பு சுவரில் மோதியது விமானம் வெடித்து சிதறி 179 பேர் பலி: பறவை மோதியதால் விபரீதம், தென்கொரியாவில் பயங்கரம் appeared first on Dinakaran.