இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை எளிதில் சமாளித்து ரன்கள் குவித்தது. அந்த அணியின் அனுபவ ஆட்டக்காரரும், கேப்டனுமான பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும், ஹேரி டெக்டார் 60 ரன்களும், பால்பிர்னி 45 ரன்களும் அடிக்க அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அந்த அணி 5 ஓவர்களுக்குள்ளேயே ரிக்கெல்டன், ஹென்ட்ரிக்ஸ், வேண்டர்டசன் என 3 முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்த அணியை மீட்க கைல் வெரைனும், ஜேசன் ஸ்மித்தும் போராடினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த வெரைன் 38 ரன்கள் எடுத்து யங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தனி நபராக போராடிய ஜேசன் ஸ்மித் 91 ரன்கள் விளாசினார்.
இறுதியாக 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா அணி 215 ரன்கள் மட்டுமே எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அயர்லாந்து பந்துவீச்சில் கிரகாம் ஹூமே, வில் யங் தலா 3 விக்கெட்டுகளும், மார்க் அடைர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பால் ஸ்டிர்லிங் ஆட்ட நாயகன் விருதையும், லிசாட் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர்.
The post தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20: 69 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.