‘பாக்’கை பதம் பார்க்கவில்லையே: அஷ்வின் ரசிகர்கள் ஆதங்கம்

சென்னை: இந்திய அணிக்காக 106 டெஸ்ட்களில் விளையாடி பல்வேறு நாடுகளை அதிரடித்த அஷ்வின் கடைசிவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவில்லை. கிரிக்கெட் விளையாடும் எல்லா அணிகளும் டெஸ்ட் போட்டியில் ஆட முடியாது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)-ல் பதிவு பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 108. இவற்றில் முழு நேர உறுப்பினர்களாக 12 நாடுகள் மட்டுமே சர்வதேச டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட முடியும். இந்த 12 நாடுகளில், 8 நாடுகளுடன் நடந்த டெஸ்ட் தொடர்களில் மட்டுமே அஷ்வின் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அஷ்வின் விளையாடிய அந்த 106 டெஸ்ட்களில் 61டெஸ்ட்களில் இந்தியா வென்று உள்ளது.

அவற்றில் அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக 24 டெஸ்ட்களில் விளையாடி 114, ஆஸிக்கு எதிராக 23 டெஸ்ட்களில் விளையாடி 115விக்கெட்களும் அஷ்வின் அள்ளியுள்ளார். புதிதாக டெஸ்ட் அரங்கில் அறிமுகமான ஆப்கானிஸ்தானுடன் கூட ஒரு டெஸ்ட்டில் விளையாடி 5 விக்கெட் சுருட்டி இருக்கிறார். ஆனால் இந்திய கிரிக்கெட்டின் விளையாட்டு எதிரியான பாகிஸ்தானுடன் விளையாடும் வாய்ப்பு கடைசி வரை அஷ்வினுக்கு வாய்க்கவில்லை. அரசியல் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக 2007/08 ஆண்டுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவில்லை. ஆனால் 2011ம் ஆண்டுதான் பன்னாட்டு டெஸ்ட் அரங்கில் அஷ்வின் அறிமுகமானார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகமான பிறகும் கூட, இரு அணிகளும் டெஸ்ட் ஆட்டங்களில் மோதவில்லை.

அதே நேரத்தில் பாக் அணிக்கு எதிராக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்களும், 6 டி20 ஆட்டங்களில் விளையாடி 3விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். இவற்றில் எந்த ஒரு ஆட்டமும் பாகிஸ்தானில் நடக்கவில்லை. கூடவே பாக்கை போல முழு நேர உறுப்பினர்களான ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய நாடுகளுடனும் டெஸ்ட் ஆட்டங்களில் அஷ்வின் ஆடியதில்லை. காரணம் அயர்லாந்து டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகும் இந்தியா அந்த நாட்டுடன் இன்னும் மோதவில்லை. ஜிம்பாப்வே இடையில் டெஸ்ட் அந்தஸ்தை இழந்து இருந்ததால் அந்த அணியுடம் மோதும் சூழல் ஏற்படவில்லை. எனினும் டெஸ்ட் போட்டிகளில் பாக்கை பதம் பார்க்க முடியாமல் ேபானது அஷ்வினுக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

The post ‘பாக்’கை பதம் பார்க்கவில்லையே: அஷ்வின் ரசிகர்கள் ஆதங்கம் appeared first on Dinakaran.

Related Stories: