கேமரா மேன் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி? ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சினிமா படப்பிடிப்புக்காக கேரளா சென்று திரும்பிய

பொன்னை, அக்.8: சினிமா படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு வேலைக்கு சென்று திரும்பிய ராணிப்பேட்டையை சேர்ந்த கேமரா மேன் ரயிலில் தவறி விழுந்து பலியானதாக தெரியவந்துள்ளது. ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம்(35). சினிமா துறையில் அசிஸ்டென்ட் கேமராமேனாக இருந்தார். இவரது மனைவி புஷ்பலதா(30). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜீவரத்தினம் குடும்பத்துடன் வேலூர் மாவட்டம் பொன்னை கருமார் தெரு பகுதியில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி ஜீவரத்தினம் மலையாள சினிமா படப்பிடிப்பு பணிக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

பின்னர் பணி முடிந்து கடந்த 30ம் தேதி ரயில் மூலம் வீட்டிற்கு புறப்பட்டதாக மனைவி புஷ்பலதாவிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் புஷ்பலதா செல்போனில் கணவரை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பலதா அவரது உறவினர்களுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று கணவரை தேடி பார்த்துள்ளார். இருப்பினும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், புஷ்பலதா காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி பொன்னை காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி புகார் அளித்தார்.

அதனடிப்படையில், பொன்னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில், கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியில் இருந்து ரயில் மூலம் வீட்டிற்கு புறப்பட்ட ஜீவரத்தினம், எர்ணாகுளம் பகுதியில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து பொன்னை போலீசார் ஜீவரத்தினம் ரயிலில் இருந்து தவறி விழுந்து தான் உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா படபிடிப்புக்காக கேரளா சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கேமரா மேன் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி? ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சினிமா படப்பிடிப்புக்காக கேரளா சென்று திரும்பிய appeared first on Dinakaran.

Related Stories: