சாம்சங் போராட்டம்; உடன்பாடு ஏற்படுமா?.. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை!

சென்னை: சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6-ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த மாதம் 9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு, சங்க அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

ஏற்கெனவே 5 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இன்று தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ், ஆணையர் கமலக்கண்ணன் முன்னிலையில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். சாம்சங் தொழிற்சாலை தரப்பில் நிர்வாக ஆலோசகர் உள்பட 4 பேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6-ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனிடையே, இன்று மாலை 3 மணியளவில் அமைச்சர்கள் குழு தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா? என்பது மாலையில் தெரிய வரும்.

The post சாம்சங் போராட்டம்; உடன்பாடு ஏற்படுமா?.. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Related Stories: