தூத்துக்குடி : தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா புகைப்பட கண்காட்சியைத் கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். தூத்துக்குடி சங்கரப்பேரி திடலில் 5வது புத்தகத் திருவிழா அக்.3ம் தேதி துவங்கியது.
இதில் வரும் 11ம்தேதி முதல் 13ம்தேதி வரை நெய்தல் கலைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழாவின் 3ம் நாளன்று புகைப்பட கண்காட்சியை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி துவக்கி வைத்து, அரங்கில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தார்.
புத்தகத் திருவிழாவில், புகைப்படங்கள் கண்காட்சியாக வைப்பதற்குத் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடியின் கலாசாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கைக் காட்சிகள் (கடற்பரப்புக்கள் நதிக்காட்சிகள். ஈர நிலங்கள், நகர்ப்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை. மீன்பிடித்தல்), விளையாட்டு போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்புகைப்படப் போட்டி இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும், போட்டியில் பங்கேற்க 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் என இருபிரிவாக போட்டியில் கலந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறந்ததாகத் தெரிவு செய்யப்படும் புகைப்படம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும், பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.
புத்தகத் திருவிழாவில் இன்றைய இளைஞர்களிடம் விஞ்சி நிற்க வேண்டியது சமூகப் பார்வையே என்ற தலைப்பில் ஆழி செந்தில்நாதனும், ஆனந்தம் செல்வகுமாரும் உரையாற்றினார். தனிமனித வளர்ச்சி என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனும், இந்திரகுமார் தேரடி ஆகியோரும் உரையாற்றினார். ’அறம் பேசு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய விருந்தினர்களைக் கனிமொழி எம்.பி கவுரவித்தார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷ்னர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, டிஆர்ஓ அஜெய்சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post கலாசாரம், பாரம்பரியம், மக்கள் வாழ்க்கை முறையை நினைவலையாக பதிவு தூத்துக்குடி புத்தக திருவிழாவில் புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.