2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

விருதுநகர்: திமுக 200 தொகுதிகளில் வெல்ல விளையாட்டு மேம்பாட்டு அணியினர் பாடுபட வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார். தென் மண்டல திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றினர். அப்போது திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், நாடாளுமன்ற குழு துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: தமிழகத்தில் கல்வியில் இடைநிற்றலை தவிர்க்க வேண்டுமென்பதற்காக காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது.

கல்வியில் மக்கள் முன்னேற வேண்டும் என தமிழக அரசு செயல்படுகிறது. ஒவ்வொரு மாணவனும் படிக்க வேண்டும், அதே நேரத்தில் விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளோம். திமுகவில் இளைஞரணி, மாணவரணிக்கு அடுத்து 3வது இடத்தில் விளையாட்டு அணி உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பெயர் சொல்லும் அளவிற்கு நடத்தி மக்கள் மனதில் இடம் பெற வேண்டும். 2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில் சமூக வலைதளப்பக்கங்களில் விளையாட்டு அணி கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நெருங்க, நெருங்க பொய்ச் செய்திகள் வரும். நாம் அவற்றை எதிர்கொண்டு பொய் செய்தி என்பதை பதிவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: